உப்பு வாரும் பணி தீவிரம்
அதிராம்பட்டினத்தில் உப்பு வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஒரு மூட்டை ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் உப்பு வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஒரு மூட்டை ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
3 ஆயிரம் ஏக்கரில் உற்பத்தி
கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்ட நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஆண்டு தோறும் ரசாயன உப்பு, சாப்பாடு உப்பு ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மழையால் காலதாமதமாக தொடக்கம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி தொடங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அடிக்கடி பெய்த மழையினால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியதால் காலதாமதமாக மார்ச் மாதத்தில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது.
இதனையடுத்து கடல் முகத்துவாரத்தை சீர் செய்தல், வரப்பு வெட்டுதல், பாத்திகட்டுதல், கடல் நீர் பாய்ச்சுதல், கால் மிதித்தல் உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உப்பு உற்பத்தி பணி தீவிரமாக நடைபெற்றது. கோடைமழை பெய்ததால் தண்ணீர் தேங்கி உப்பளங்கள் வீணாகியதால் உற்பத்தியாளர்கள் பலத்த நஷ்டம் அடைந்தனர்.
உப்பு வாரும் பணி
உப்பு உற்பத்தி பணி முடிவடைந்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சாப்பாடு உப்பு வாரும் பணி நடைபெற்று வருகிறது. சாப்பாடு உப்பு 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.200-க்கு விற்பனையாகிறது.
கருவாடுகள் பதப்படுத்தவும், சுற்றியுள்ள கிராமங்களில் உப்பு வியாபாரம் செய்வதற்கும் உள்ளூர் வியாபாரிகள் முதல் வெளியூர் வியாபாரிகள் வரை மூட்டை கணக்கில் வாங்கி செல்கின்றனர். தற்போது சாப்பாடு உப்பு அதிராம்பட்டினம் கடற்பகுதியில் இரண்டு ஏக்கர் மட்டுமே உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை இடர்பாடுகள்
இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில் உப்பு உற்பத்தி தொழில் இயற்கை இடர்பாடுகள் மற்றும் போதிய விலை இல்லாததால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.முன்பு தொழிலாளர்கள் பற்றாக்குறையினால் தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உப்பு உற்பத்தி தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது.
ஆனால் தற்போது உள்ளூரில் உள்ள தொழிலாளர்களுக்கே வேலை இல்லாமல் வேறு வேலைக்குச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ெரயில் மூலம் ஏற்றுமதி செய்துவந்த நிலையில் தற்போது 50 ஏக்கரில், அதுவும் உப்புத்தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் சில தொழிலாளர்களின் வயிற்றுப்பிழைப்பிற்காக செய்ய வேண்டியுள்ளது என்றார்.