குப்பைத் தொட்டியாக மாறும் உப்பாறு ஓடை


குப்பைத் தொட்டியாக மாறும் உப்பாறு ஓடை
x
திருப்பூர்

குடிமங்கலம்:

பெதப்பம்பட்டி அருகே உப்பாறு ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதால் குப்பைத்தொட்டியாக மாறி வருகிறது.

உப்பாறு ஓடை

குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறு செல்கிறது.

உப்பாறு ஓடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது.

உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.

உப்பாறு ஓடை தூர்வாரப்படாததால் பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக புதர்மண்டி கிடக்கிறது. மேலும் பல இடங்களில் அந்தந்த பகுதியில் உள்ள கழிவுகள், குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனால் உப்பாறு ஓடை மாசடைந்து வருகிறது.

நடவடிக்கை

உப்பாறு ஓடையில் நீர் செல்லும் இடங்களில் உப்பாறு ஓடையின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

பாலங்கள் கட்டப்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். பெதப்பம்பட்டி அருகே உப்பாறு ஓடையின் குறுக்கே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் இதனருகில் குப்பைகிடங்கு போல் அதிக அளவில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

இதனால் உப்பாறு மாசடைந்து வருகிறது. உப்பாறு ஓடையில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story