தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதிப்பால் உப்பு விலை உயர வாய்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதிப்பால் உப்பு விலை உயர வாய்ப்பு இருப்பதாக உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 15 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால், விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார்.
உப்பு உற்பத்தி
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இதில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் முழுவீச்சில் உப்பு உற்பத்தி நடைபெறும். வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு உப்பு உற்பத்தி சீசன் முடிவடையும்.
இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட சீசன் காலங்களாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவ்வப்போது மழை பெய்ததாலும், மேல்திசை காற்று சரிவர வீசாததாலும் உப்பு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி சீசன் நிறைவடைந்து உள்ளது. இதைத் தொடர்ந்து உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டு உள்ள உப்பு குவியல்களை பிளாஸ்டிக் தார்ப்பாய்கள், தென்னங்கீற்றுகளாலும் உற்பத்தியாளர்கள் பாதுகாப்பாக மூடி வைத்து உள்ளனர்.
15 லட்சம் டன்
இதுகுறித்து தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு அவ்வப்போது மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக சுமார் 15 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தியாகி உள்ளது. இதில் சுமார் 9 லட்சம் டன் உப்பு விற்பனையாகி விட்டது. இன்னும் 6 லட்சம் டன் அளவுக்கு உப்பளங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த உப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை போதுமானதாக இருக்கும். தற்போது ஒரு டன் உப்பு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மழை நன்கு பெய்ய தொடங்கியதும் உப்பின் தேவையை பொறுத்து உப்பு விலை உயர வாய்ப்பு உள்ளது" என்றார்.