திருப்புல்லாணி, ஆணைகுடி பகுதியில் தேங்கிய மழைநீரால் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு


ராமநாதபுரம் பகுதியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் திருப்புல்லாணி மற்றும் ஆணைகுடி பகுதியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

திருப்புல்லாணி,

ராமநாதபுரம் பகுதியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் திருப்புல்லாணி மற்றும் ஆணைகுடி பகுதியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உப்பு உற்பத்தி

தமிழகத்தில் தற்போது கோடை கால சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்றது. இதனிடையே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகின்றது.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில ஊர்களில் இரண்டாவது நாளாக நேற்று நல்ல மழை பெய்தது. குறிப்பாக திருப்புல்லாணி, ஆணைகுடி, ஆர்.எஸ்.மடை, கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பல ஊர்களிலும் நேற்று அதிகாலை முதல் பகல் வரையிலும் சாரல் மழையாகவே பெய்து கொண்டிருந்தது. இதனிடையே கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, ஆணைகுடி பகுதியில் கல் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

உப்புகள் கரைந்தன

வெயிலின் தாக்கத்தால் பாத்திகளில் நன்கு உற்பத்தியாகி இருந்த கல் உப்புகள் திடீரென பெய்த கோடை மழையால் மழைநீரானது பாத்திகளில் தேங்கியதால் பாத்திகளில் உற்பத்தியாகி இருந்த கல் உப்புகள் கரைந்து போயின.

மேலும் பாத்திகளில் இருந்து பிரித்தெடுத்து மேலே குவித்து வைக்கப்பட்டுள்ள கல் உப்புகளும் மழை நீரில் நனைந்து கரைந்து ஓடி வருகின்றன. இரண்டு நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதை நம்பி வாழும் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story