ஊர்க்காவல் படை சார்பில் சமத்துவ பொங்கல் விழா
நாகர்கோவிலில் நடந்த ஊர்க்காவல் படையினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் நடந்த ஊர்க்காவல் படையினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டார்.
சமத்துவ பொங்கல் விழா
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டதி பள்ளி சந்திப்பு பகுதியில் ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஊர்க்காவல் படை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஊர்க்காவல் படை உதவி கமாண்டர் ஜெனரல் பிரகாஷ் குமார் தலைமை தாங்கி பேசினார். குமரி மாவட்ட ஏரியா கமாண்டர் டாக்டர் பிளாட்பின் முன்னிலை வகித்து பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
விளையாட்டு போட்டிகள்
போலீசாருடன் இணைந்து ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணி, போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணி போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். பணியின்போது அவர்களுக்கு மன அழுத்தங்கள் இருக்கும். இதுபோன்ற விழாக்களை கொண்டாடும்போது அது மறைந்துவிடும். மேலும் இதுபோன்ற விழாக்கள்தான் நமது அடையாளத்தை பிரதிபலிக்கின்றன. காவல்துறைக்கு ஊர்க்காவல் படையினர் பெரிதும் உதவியாக இருந்து வருகிறார்கள். உங்களுக்கு எனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையை போன்று உங்களுக்கும் விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.
பின்னர் ஊர்க்காவல் படையினரும், போலீசாரும் இணைந்து பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
பாரம்பரிய உடை
முன்னதாக ஏரியா கமாண்டர் அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கலிடப்பட்டது. பொங்கல் பொங்கும்போது ஊர்க்காவல் படையினர் பொங்கலோ பொங்கல் என்று உரத்த குரல் எழுப்பியும், குலவையிட்டும் பொங்கலிட்டனர். பின்னர், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. சமத்துவ பொங்கல் விழாவில் ஊர்க்காவல்படை உதவி கமாண்டர் ஜெனரல் பிரகாஷ்குமார், ஏரியா கமாண்டர் டாக்டர் பிளாட்பின் ஆகியோர் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆண், பெண் ஊர்க்காவல் படையினர் பலரும் வேட்டி-சட்டை மற்றும் சேலை அணிந்து பங்கேற்றனர். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நண்பர் சந்தோஷ் மற்றும் ஊர்க்காவல் படையினர் 50 பேர் கலந்து கொண்டனர். பெண் ஊர்க்காவல் படையினர் சிலர் அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.