சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
மாரியம்மன் கோவில்
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இந்த அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம்பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். இதன் காரணமாக இக்கோவிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
தேரோட்டம்
நேற்று முன் தினம் இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அம்மன் தேருக்கு அழைத்துவரப்பட்டார். தொடர்ந்து காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகள் ஒலிக்க அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர், தேரோடும் வீதி வழியாக வலம் வந்தது. அப்போது, பக்தர்கள் சாலையோரங்களில் நின்றும், தங்களின் வீட்டு முன்நின்றும், வீட்டு மாடிகளில் நின்றும் வழிபட்டனர். சிலர் ஆர்வமிகுதியால் மின்மாற்றியின் மீது ஏறி நின்று தேரோட்டத்தை கண்டுகளித்தனர். பின்னர் மாலை 4.05 மணி அளவில் தேர்நிலையை வந்தடைந்தது.
குவிந்த பக்தர்கள்
தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்தனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் புனித நீராடி அங்கிருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து சென்று கோவிலுக்கு முன்புறம் தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து, கோவிலை வலம் வந்த அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
அன்னதானம்
இந்த விழாவில் ச.கண்ணனூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் எஸ். ஆர்.மணிகண்டன், சாந்தி பாலகிருஷ்ணன், அம்சவள்ளி சூறாவளிபிச்சை டி.அழகேசன், எ.கருணாகரன், இனாம்சமயபுரம் ஊராட்சிதலைவர் மகாராணி தெய்வசிகாமணி, துணைத்தலைவர் அப்துல்லா, சமயபுரம் அபிமெஸ் உரிமையாளர் விஜி என்ற விஜயகுமார், ஆர்.ஜே.கன்ஸ்ட்ரக் சன்ஸ் உரிமையாளர் ஜெயபாலன், நாகநாதர் டீ ஸ்டால் அண்ட் மகாதேவ்பேக்கரி உரிமையாளர்கள் என்.மகாதேவன், ஆர்.கோவிந்தன், சரவணபவ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளின் சார்பாக நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேரோட்டம் அமைதியாக நடந்து முடிந்ததை தொடர்ந்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர். தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து கழகத்தின் சார்பாக திருச்சி, துறையூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக சமயபுரத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் உள்ள சக்தி நகர், பழைய பெட்ரோல் விற்பனை நிலையம், ஆட்டுச்சந்தை உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்ததால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பஸ்கள் ஊர்ந்து செல்வதை காணமுடிந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.