சம்பா சாகுபடி பணி தீவிரம்
திருக்கடையூர் -ஆக்கூர் பகுதியில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருக்கடையூர்:
திருக்கடையூர் -ஆக்கூர் பகுதியில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
விவசாயம் முக்கிய தொழில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், ஆக்கூரை சுற்றியுள்ள பகுதிகளான டீ.மணல்மேடு. அன்னப்பன்பேட்டை, பிள்ளைபெருமாநலூர். மாத்தூர். கிடங்கல்.மாமாகுடி. கலமநல்லூர.மடப்புரம். கிள்ளியூர். நட்சத்திரமாலை, வளையல்சோழகன், காளகஸ்திநாதபுரம், தலைச்சங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்னதாக திறக்கப்பட்டதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது.
சம்பா சாகுபடி பணி
தற்போது மேற்கண்ட கிராமங்களில் சம்பா சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலத்ைத உழவு செய்து நாற்று நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த ஆண்டுகளில் வாய்க்கால் மற்றும் ஆறுகளில் சரிவர தண்ணீர் வராததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் மின் மோட்டாரில் கூட தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக சாகுபடி செய்யாததால் பெரும் பகுதி விவசாய நிலங்கள் தரிசாக காணப்பட்டது.
அதிக மகசூல் கிடைக்கும்
இந்த ஆண்டு வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் ஆர்வமுடம் சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். நெற்பயிர்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளதால் சம்பா சாகுபடிக்கு அதிக மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.