இரணியல் அருகே கோவிலில் சாமி சிலை கடத்தல்
திங்கள்சந்தை:
இரணியல் அருகே கோவிலில் கதவை உடைத்து சாமி சிலையை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
மகாதேவர் கோவில்
இரணியல் அருகே உள்ள தோட்டியோடு சுண்டான்குளத்தங்கரையில் சம்பு மகாதேவர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலையில் பூசாரி கோவிலுக்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த ேபாது கோவிலில் இருந்த சிவன் அம்பாள் வெண்கல சிலையை காணவில்லை.
இரவில் யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்த உள்ளே புகுந்து சிலையை கடத்தி சென்றுள்ளனர். கடத்தப்பட்ட சிலையின் மதிப்பு ரூ.24 ஆயிரம் எனக்கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
அதே நேரத்தில் கோவிலில் இருந்த பூஜை பொருட்கள், குத்துவிளக்கு போன்றவை அப்படியே இருந்தன. இதுகுறித்து பூசாரி, கோவில் நிர்வாகி சிவகுமாருக்கு தகவல் கொடுத்தார். அவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் சிலையை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவிலில் சாமி சிலை கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.