60 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட கும்பகோணம் கோவில் சாமி சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு


60 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட கும்பகோணம் கோவில் சாமி சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
x

கும்பகோணம் அருகே உள்ள கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சாமி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இருக்கும் சிவபுரத்தில் சிவகுருநாத சுவாமி கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் உள்ள சோமாஸ்கந்தர் மற்றும் தனிஅம்மன் பழமையான சாமி சிலைகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி சிலைகள் கோவிலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.

நாராயணசாமி என்பவர் இந்த புகாரை கொடுத்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி உத்தரவிட்டார். ஐ.ஜி.தினகரன் மேற்பார்வையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் திருட்டு போன உண்மையான சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். திருட்டு சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகளை கோவிலில் வைத்துள்ளதும் உறுதியானது. கோவில் ஊழியர்கள் துணையுடன் கடத்தல்காரர்கள் இந்த மிகப்பெரிய திருட்டை அரங்கேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சிலைகளை மீட்க நடவடிக்கை

விலை மதிக்க முடியாத சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் உள்ள நார்டன் சைமன் அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த சிலை 10-ம் நூற்றாண்டை சேர்ந்தது.

ராஜராஜசோழ மன்னனின் பாட்டியான செம்பியன் மாதேவி அமைத்த செப்பு கலைக்கூடத்தில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது. தனியம்மன் சிலை அமெரிக்காவில் டென்வர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் 10-ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது.

இந்த சிலைகளை அமெரிக்காவில் இருந்து மீட்டு தமிழகம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

இந்த சிலைகள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு, அமெரிக்காவிற்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story