தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்: தேசிய அளவிலான நன்றி விழா
மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி தேசிய அளவிலான நன்றி விழா 5-ந் தேதி குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடக்கிறது. இதையொட்டி பிரமாண்டமான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில்,
மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி தேசிய அளவிலான நன்றி விழா 5-ந் தேதி குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடக்கிறது. இதையொட்டி பிரமாண்டமான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேசிய நன்றி விழா
குமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த 15-ந் தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோட்டார், குழித்துறை மறைமாவட்டம் சார்பில் தேசிய அளவிலான நன்றி விழா கொண்டாட்டம் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலையை அடுத்து அதாவது நாகர்கோவிலில் இருந்து 4 வழிச்சாலையில் காவல்கிணறு செல்லும் பாதையில் காற்றாடிமலையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் நடைபெறுகிறது.
விழாவின் தொடக்கமாக பிற்பகல் 2.30 மணி அளவில் தேவசகாயம் வாழ்க்கை வரலாறு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இலங்கைத் தமிழர்கள் வரவேற்பு நடனம் ஆடுகிறார்கள். தோவாளை டி.எம்.ஐ. கல்லூரி, நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, அனந்தநாடார் குடியிருப்பு ஜெரோம் கல்லூரி, மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி, கருங்கல் புனித அல்போன்சா கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தேவசகாயம் வாழ்க்கை வரலாறு குறித்த நாட்டியமாடுகிறார்கள்.
50 ஆயர்கள்
பின்னர் மாலை 4 மணி அளவில் விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 5 மணியளவில் ஆடம்பரத் திருப்பலி நடக்கிறது. போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமையில் கர்தினால்கள் ஆஸ்வால்டு கிராசியாஸ் (அகில இந்திய ஆயர் பேரவைத் தலைவர்), ஜார்ஜ் ஆலஞ்சேரி (சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலைப் பேராயர்), தமிழக ஆயர் பேரவைத் தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி, கோவா- டாமன் பேராயர் பிலிப் நேரி பெர்றாவோ, கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரக பரிபாலகருமான அந்தோணி பாப்புசாமி, புதுவை பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், போபால் பேராயர் துரைராஜ், நாக்பூர் பேராயர் எலியாஸ் உள்பட 50 ஆயர்கள் மற்றும் பேராயர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.
4 அமைச்சர்கள்
இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், சபாநாயகர் அப்பாவு, மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பி.க்கள் ஞானதிரவியம், விஜய்வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வக்கீல் மகேஷ், குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பாலபிரஜாபதி அடிகளார், குமரி மாவட்ட திருவருட்பேரவை நிர்வாகிகள், சி.எஸ்.ஐ. திருச்சபை பேராயர்கள், பல்சமய பிரதிநிதிகள், குமரி மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பிரமாண்டமான பந்தல்
விழா மேடை மற்றும் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் விழா பந்தல் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மழை பெய்தாலும் விழாவில் பங்கேற்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இரும்பு தூண்கள் தார்ப்பாய்களால் ஆன மேற்கூரைகளுடன்கூடிய பந்தல் அமைக்கப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, பணகுடி, தூத்துக்குடி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் விழா ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரகப் பரிபாலகரும், மதுரை பேராயருமான அந்தோணி பாப்புசாமி, விழா ஒருங்கிணைப்பாளர் அருட்பணியாளர் ஜாண்குழந்தை மற்றும் கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்களின் அருட்பணியாளர்கள், பொதுநிலையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.