நாகை மீனவர்கள் மீது 2-வது நாளாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகை மீனவர்கள் மீது 2-வது நாளாக தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.50 ஆயிரம் பொருட்கள் மற்றும் 200 கிலோ வலைகளை கொள்ளையடித்து சென்று வி்ட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மீனவர்கள் மீது 2-வது நாளாக தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.50 ஆயிரம் பொருட்கள் மற்றும் 200 கிலோ வலைகளை கொள்ளையடித்து சென்று வி்ட்டனர்.
நாகை மீனவர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர்.
இதைப்போல வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவரும் தாக்கப்பட்டர். தாக்கப்பட்ட மீனவர்கள் நாகை, வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் 2-வது முறையாக நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி மீன்பிடி கருவிகளை பறித்து சென்றுள்ளனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதசுவாமி(வயது45) என்பவருக்கு செந்தமான பைபர் படகில் அவரும், ராமராஜன்(32), செல்வராஜ்(50) ஆகிய 3 பேரும் கடந்த 21-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 2 பைபர் படகில் அங்கு வந்த 6 இலங்கை கடல் கொள்ளையர்கள் மூன்று மீனவர்களையும் இரும்பு கம்பியால் தாக்கி படகில் வைத்திருந்த ஜி.பி.எஸ். கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, மீன்பிடி வலைகள், மீன், செல்போன், 20 லிட்டர் டீசல் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
200 கிலோ வலைகள் கொள்ளை
தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர்.
இதில் கம்பியால் தாக்கப்பட்டு கை, காலில் காயமடைந்த மீனவா் ராமராஜன் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைப்போல வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த அருள்பாண்டியன் என்பவருக்கு சொந்தமான படகில் அவரும் அதே ஊரை சேர்ந்த கண்ணன்(40), சாமிநாதன்(28), பிரதீபன்(20) ஆகியோர் வேதாரண்யம் அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு
2 படகுகளில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் படகில் இருந்த மீனவர்களை தாக்கி 200 கிலோ வலைகளை வெட்டி கொள்ளையடித்து சென்று விட்டனர்.
வழக்குப்பதிவு
இது குறித்த புகாரின் போரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர்கள் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழக மீன்வளர்ச்சிக் கழக தலைவரும், நாகை மாவட்ட தி.மு.க. செயலாளருமான கவுதமன், வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
தொடர்ந்து 2- வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நாகை மாவட்ட மீனவர் கிராமங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய- மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.