திட்டக்குடி அருகே சாலையோரம் நிறுத்தப்படும் மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
திட்டக்குடி அருகே சாலையோரம் நிறுத்தப்படும் மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
ராமநத்தம்,
அரியலூர் மாவட்ட எல்லையில் உள்ள சிலப்பனூர் பகுதியில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. அந்த மணல் குவாரிக்கு மணல் அள்ளவரும் லாரிகள் அனைத்தும் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி- கொடிக்களம் இடையில் உள்ள நிலப்பகுதியில் யார்டு அமைத்து நிறுத்தி வைக்கப்பட்டு அங்கிருந்து மணல் அள்ள அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மணல் அள்ள முடியாத சூழல் உள்ளதாலும், யார்டில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலும், பின்னால் வரும் லாரிகள் திட்டக்குடி விருத்தாசலம் சாலையின் இருபுறமும், நிறுத்தி வைக்கப்படுகிறது.
கோரிக்கை
ஆயிரக்கணக்கான லாரிகள் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் விபத்து ஏற்பட்டாலோ, பிரசவத்திற்கோ அவசரமாக ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மணல் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், மீண்டும் விபத்துகள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.