தேங்கிய மணல் அகற்றும் பணி தொடக்கம்


தேங்கிய மணல் அகற்றும் பணி தொடக்கம்
x

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்ச்சாலையில் தேங்கிய 40 லோடு மண் அகற்றப்பட்டது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்ச்சாலையில் தேங்கிய 40 லோடு மண் அகற்றப்பட்டது.

மண் அகற்றும் பணி

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு மாதம் 2, 4-வது சனிக்கிழமைகளில் மெகா கூட்டு தூய்மை பணி நடந்து வருகிறது. இதில் மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் இணைந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம் மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்ச்சாலை (தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோடு, வ.உ.சி. சாலை, (டபிள்யூ.ஜி.சி. ரோடு) ஆகிய சாலைகளின் இருபுறங்களிலும் தேங்கி உள்ள மண்ணை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த சாலைகளில் பகல் நேரத்தில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் இரவு நேரத்தில் மண் குவியல்களை அகற்றும் பணி நடந்தது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் மண் அகற்றும் பணி தொடங்கியது.

இந்த பணியை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் அருண்குமார், மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன், சுகாதார அலுவலர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

40 லோடு

இந்த பணியில் 3 பொக்லைன் எந்திரங்கள், 4 டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 50 பேர் மண் அகற்றும் பணியை மேற்கொண்டனர். இரவு 9 மணிக்கு தொடங்கி பணி நேற்று அதிகாலை 3 மணி வரை நடந்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் அகற்றும் பணி முடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்தம் 40 டிராக்டர் லோடு அள்ளப்பட்டு உள்ளது.

இந்த மண் தூத்துக்குடி மாநகராட்சி மையவாடியில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதியில் போட்டு நிரப்பப்பட்டது.

தொடர்ந்து தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகம் வரை ரோட்டின் இருபுறமும் உள்ள மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதே போன்று மாநகராட்சியில் உள்ள அனைத்து பிரதான சாலைகளிலும் தேங்கி உள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story