விராலிமலை அருகே மணல் கடத்திய லாரி சிறைபிடிப்பு; டிரைவர் கைது
விராலிமலை அருகே மணல் கடத்திய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மணல் கடத்தல்
விராலிமலை தாலுகாவுக்குட்பட்ட ராஜகிரி, கத்தலூர், மதயானைப்பட்டி, பேராம்பூர், குன்னத்தூர், ஆவூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மணல் மற்றும் கிராவல் மண் லாரிகளில் அள்ளி கடத்தி செல்வதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வருவாய் துறையினருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பேராம்பூர் ஊராட்சிக்குட்பட்ட மலம்பட்டியில் மாத்தூர்-இலுப்பூர் சாலையோரம் அனுமதியுடன் கிராவல் மண் அள்ளுவதாக கூறிக்கொண்டு சுமார் 20 அடி ஆழத்திற்கு மேல் சுரங்கம் போல் ஒரு ஏக்கர் அளவிற்கு கிராவல் மண் அள்ளப்பட்டு வருகிறது. அதிக ஆழத்தில் கிராவல் மண் வெட்டி அள்ளிச்செல்வதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வருவாய்த்துறையினருக்கும், கனிம வளத்துறையினருக்கும் புகார் தெரிவித்தும் அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
லாரி சிறைபிடிப்பு
அதேபோல் விராலிமலை அருகே தனியார் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் எவ்வித அனுமதியும் இன்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் விராலிமலையை சேர்ந்த சிலர் கிராவல் மண் அள்ளி செல்வதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று அப்பகுதியினர் கூறி வருகின்றனர். இந்தநிலையில் விராலிமலை தாலுகா, குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட களிமங்கலத்தில் திருச்சி-புதுக்கோட்டை மாவட்ட எல்லையோர பகுதியை சேர்ந்த ஒரு நபர் கடந்த சில நாட்களாக அனுமதியின்றி டாரஸ் லாரிகளில் அதிகளவில் கிராவல் மண் அள்ளி கடத்தி சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த களிமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கிராவல் மண் அள்ளி சென்ற லாரியை சிறை பிடித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற மாத்தூர் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தியதில் எவ்வித அனுமதியும் இன்றி டாரஸ் லாரிகளில் கிராவல் மண் அள்ளி சென்றது தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
இதையடுத்து கிராவல் மண்ணுடன் டாரஸ் லாரியை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியை சேர்ந்த பழனியாண்டி (வயது 50) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
அதேபோல் விராலிமலை தாலுகாவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மணல் மற்றும் கிராவல் மண் கடத்தி செல்வதை தடுக்க மாவட்ட கலெக்டர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.