மணல் கடத்தலை தடுக்க வேண்டும்


மணல் கடத்தலை தடுக்க வேண்டும்
x

பத்தலப்பல்லி மலட்டாற்றில் மணல்கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர்

பத்தலப்பல்லி மலட்டாற்றில் மணல்கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறைதீர்வு கூட்டம்

பேரணாம்பட்டு தாலுகா விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர் பேசியதாவது:-

விவசாயிகளை சந்திக்கவில்லை

பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமார், மாவட்ட கலெக்டர் மற்றும் குடியாத்தம் சப்-கலெக்டர் நடத்திய கூட்டத்திற்கும், இங்கு நடைபெறும் கூட்டத்திற்கும் வரவில்லை. வன ஊழியர் மட்டுமே கூட்டத்திற்கு வருகின்றார். மாவட்ட வன அதிகாரியிடம் விவசாயிகள் முறையிட மனு கொடுக்க சென்ற போது கூட மாவட்ட வன அதிகாரி விவசாயிகளை சந்திக்க வில்லை. இதனால் விவசாயிகள் போராட்ட களத்திற்கு தொடர்ந்து தள்ளப்பட்டு வருகின்றனர்.

விவசாய நிலமில்லாதவர்கள் தாங்கள் வளர்த்து வரும் மாடுகளை வனப்பகுதிக்குள் விட்டு வருகின்றனர். இதனால் மாடுகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. பயிர்களை சேதப்படுத்தும் மாடுகளை விரட்டினாலோ, கட்டி வைத்தாலோ மாட்டின் உரிமையாளர்கள் விவசாயிகளை மிரட்டி வருகின்றனர். மாட்டின் உரிமையாளர்களை கட்டுப்படுத்த வேண்டும்.

மணல் கடத்தலை தடுக்க வேண்டும்

பத்தலப்பல்லி மலட்டாற்றில் இரவு பகலாக தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதால் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, கிணறுகள் வறண்டு, விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பது இல்லை. மணல் கடத்தலை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேராங்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி மோகன் பாபு மீது வனத்துறையினர் போட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதனை தொடர்ந்து தாசில்தார் நெடுமாறன் பதிலளித்து பேசுகையில் பேரணாம்பட்டு வனச்சரகர் அடுத்த குறை தீர்வு கூட்டத்திற்கு வரவில்லையெனில் உடனடியாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் தெரிவிக்கப்படும். பேரணாம்பட்டு பகுதியில் நடைபெற்று வரும் மணல் கடத்தல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் வடிவேல், வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, தோட்டக்கலை உதவி அலுவலர் வெங்கடேசன் மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.


Next Story