காவிரி பாலத்தில் பழுதாகி நின்ற மணல் லாரியால் போக்குவரத்து பாதிப்பு


காவிரி பாலத்தில் பழுதாகி நின்ற மணல் லாரியால் போக்குவரத்து பாதிப்பு
x

காவிரி பாலத்தில் பழுதாகி நின்ற மணல் லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி

சீரமைப்பு பணி

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையில் இருந்து திருவானைக்காவல் நோக்கி செல்லும் வழித்தடத்தில் உள்ள காவிரி பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காவிரி பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. சிந்தாமணி அண்ணாசிலையில் இருந்து திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகள் மற்றும் சென்னை, சேலம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஓடத்துறை வழியாக திருச்சி-சென்னை பைபாஸ் சாலை வழியாக சென்று வருகின்றன.

இதனால் திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் அவதி அடைந்து வருகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்தநிலையில் கரூரில் இருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறைக்கு சென்ற டிப்பர் லாரி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி பாலத்தில் நேற்று காலை வந்தபோது, அதிக பாரம் தாங்காமல் திடீரென பழுதாகி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்றப்பாதையில் திருப்பி விட்டனர். பின்னர் பழுதாகி நின்ற லாரியையும் பாலத்தில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். பின்னர் 3 மணி நேரத்துக்கு பிறகு, அந்த லாரி அங்கிருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது.


Next Story