சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்கள் கர்நாடகாவுக்கு தப்பி ஓட்டம்


சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்கள்  கர்நாடகாவுக்கு தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீகூர் வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்கள் சிலர் கர்நாடகாவுக்கு தப்பி சென்று உள்ளனர். இதனால் தமிழகம் மற்றும் கர்நாடகா வனத்துறையினர் இணைந்து கடத்தல்காரர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்,

சீகூர் வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்கள் சிலர் கர்நாடகாவுக்கு தப்பி சென்று உள்ளனர். இதனால் தமிழகம் மற்றும் கர்நாடகா வனத்துறையினர் இணைந்து கடத்தல்காரர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

3 பேர் கைது

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான சீகூர் வனப்பகுதியில் சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. இங்கு காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அப்பகுதியில் வன ஊழியர்கள் தினமும் ரோந்து பணி மேற்கொள்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து சென்ற போது வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் சீகூர் வனச்சரகர் முரளி உள்ளிட்ட வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்திய தெங்குமரஹாடாவை சேர்ந்த பண்டன், மசினகுடி பகுதியை சேர்ந்த சந்திரன், பாலன் ஆகிய 3 பேரை கைது செய்து கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கர்நாடகாவுக்கு தப்பி ஓட்டம்

இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், வழக்கில் இன்னும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சந்தன மர கடத்தல்காரர்கள் பலர் கர்நாடகா மாநிலத்துக்கு தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்கும் பணியில் சீகூர் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சந்தன மர கடத்தல் வழக்கில் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் கர்நாடகாவுக்கு தப்பி சென்று உள்ளதாக தெரியவந்து உள்ளது. இதனால் கர்நாடகா வனத்துறையினருடன் இணைந்து சந்தன மர கடத்தல்காரர்களை பிடிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.


Next Story