வாய்க்காலில் தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு


வாய்க்காலில் தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு
x

மயிலாடுதுறை அருகே பழங்காவிரி வாய்க்காலில் தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே மூவலூரில் காவேரியில் இருந்து பழங்காவிரி வாய்க்கால் பிரிந்து மயிலாடுதுறை நகரத்தை கடந்து மன்னம்பந்தல் வாய்க்காலில் சேர்கிறது. மயிலாடுதுறை நகரத்துக்கு முக்கிய நீராதாரமாக இந்த பழங்காவிரி வாய்க்கால் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் இருந்த பழங்காவிரி வாய்க்காலில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சமீபத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும், தூர்வாரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இந்த வாய்க்கால் மயிலாடுதுறை நகரில் 25-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பழங்காவிரி வாய்க்காலில் தற்போதும் குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்படவில்லை. இந்தப் பழங்காவிரி வாய்க்காலில் ரயிலடி தொடங்கி ராஜன் தோட்டம் வரை பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு நீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக கூறைநாடு செங்கழுநீர் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் பழங்காவிரியில் குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டு அங்குள்ள பாலத்தின் மதில் தேங்கி நிற்கின்றன.

இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பழங்காவிரி வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் அப்புறப்படுத்துவதோடு இது போன்ற செயல்களை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story