கார் மோதி தூய்மை பணியாளர் பலி
திருச்செந்தூரில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது கார் மோதி படுகாயமடைந்த தூய்மை பணியாளர் பலியானார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் சாலையோரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானார்.
தூய்மை பணியாளர்
திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அலெக்ஸ் (வயது 55). இவர், திருச்செந்தூர் நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் திருச்செந்தூர் கீழரதவீதியில் உள்ள சாலை ஓரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார்.
கார் மோதியது
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அலெக்ஸ், படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்த மற்ற பணியாளர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சாவு
ஆனால் அங்கு நேற்று அதிகாலையில் அலெக்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்புரவு பணியில் ஈடுபட்டபோது வாகனம் மோதி தூய்மை பணியாளர் பலியான சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.