தற்கொலை செய்ய அனுமதி கோரி தூய்மை பணியாளர் மனு அளித்ததால் பரபரப்பு
ஊதியம் வழங்காததால் சிரமப்படுவதாக கூறி தற்கொலை செய்ய அனுமதி கோரி தூய்மை பணியாளர் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொணவக்கரை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் துரைராஜ் என்பவர் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. ஆனால், ஊராட்சி நிர்வாகம் கடந்த பல மாதங்களாக எனக்கு ஊதியம் வழங்கவில்லை. இதனால் குழந்தைகளின் கல்வி, வீட்டு செலவு மற்றும் தனது மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் சிரமப்பட்டு வருகிறேன். எனவே, நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, நான் 1997-ம் ஆண்டில் நிரந்தர பணியாளராக கொணவக்கரை ஊராட்சியில் சேர்ந்தேன். எனக்கு ஊதிய உயர்வு உள்பட சில சலுகைகள் 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், காலம் கடத்துகின்றனர். நான் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.