தூய்மை பணியாளர்கள் கோரிக்கை அட்டை ஏந்தி ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் நேற்று 8-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கோரிக்கை அட்டை ஏந்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
ஈரோட்டில் நேற்று 8-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கோரிக்கை அட்டை ஏந்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
வேலைநிறுத்த போராட்டம்
ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு நேரடியாக சென்று தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகிறார்கள். இதனால் நகரில் எங்கும் குப்பை தொட்டிகள் கிடையாது. இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களது போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. அவர்கள் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்ப பெறவேண்டும். பணி நிரந்தரம், குறைந்தபட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நேற்று 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு கோரிக்கை அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குப்பை சேகரிக்கும் பணி பாதிப்பு
8-வது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டத்தால் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் குப்பைகள் சேகரிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நிரந்தர தூய்மை பணியாளர்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே குப்பைகளை சேகரித்து வருகிறார்கள். இதனால் பல்வேறு பகுதிகளில் குப்பைகளை கொட்ட முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
குப்பைகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சிலர் சாலையோரம் வீசி செல்கிறார்கள். இதனால் நகரில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இன்று (சனிக்கிழமை) மாலை தூய்மை பணியாளர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். தூய்மை பணியாளர்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.