தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் -பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை
தென்காசி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்
தென்காசி மாவட்ட கலெக்டருக்கு ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 2300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இதுநாள் வரை நாள்தோறும் வழங்கப்படும் ஊதியம் ரூ.405 ஆகும்.
தற்பொழுது உள்ள விலைவாசி உயர்வின் காரணத்தால் மேற்கண்ட ஊதியத்தினால் 2300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளரின் குடும்பங்கள் மிகவும் ஏழ்மை நிலையிலேயே உள்ளன. மேலும் தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்பதற்கு போதிய நிதி இல்லாததால் தினக்கூலிகளாக செல்லும் அவலநிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு தூய்மை பணியாளர்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் ஊதியத்தொகையை நாளொன்றிற்கு ரூ.600 முதல் 700 வரை உயர்த்தி வழங்கிட ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.