தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் மாநகராட்சியில் தினக்கூலிகளாக தூய்மை பணியாளர்கள் மற்றும் கொசு மருந்து தெளிப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் அரசு நிர்ணயித்த சம்பள தொகையை தருவதில்லை. மிக சொற்ப தொகையே வழங்குகின்றனர். அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் கொசு மருந்து தெளிப்பாளர்கள் நேற்று தங்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மாதம்தோறும் சரியான தேதியில் சம்பளம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் தர வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.