சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சங்கரநாராயண சுவாமி கோவில்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினமும் காலை, இரவில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் தனித்தனியாக தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், தாசில்தார் பழனிவேல், சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், அ.தி.மு.க. நகர அவைத்தலைவர் வேலுச்சாமி, நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ரமேஷ், பா.ஜனதா நகர தலைவர் கணேசன், கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து உள்ளிட்ட திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு சுதீர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.