நாசரேத் கல்லூரியில் மரக்கன்றுகள் நடவு
நாசரேத் கல்லூரியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
நாசரேத்:
தூத்துக்குடி - நாசரேத் சி.எஸ்.ஐ திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை மற்றும் நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. இணைந்து சுற்றுச் சூழல் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை நடத்தின. முன்னதாக, மூக்குப்பேறி தூயமாற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சேகர குருவானவர் ஞானசிங் ஜெபம் செய்தார். தூத்துக்குடி - நாசரேத் சி.எஸ்.ஐ திருமண்டல உப தலைவர் தமிழ்ச்செல்வன், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் 'லே' செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெற்றனர். இந்த ஊர்வலம் மூக்குப்பேறி, நாசரேத் நகர பஞ்சாயத்து அலுவலகம், காமராஜர் பேருந்து நிலையம், சந்தி பஜார், லூக்கா மருத்துவமனை வழியாக நாசரேத் மர்க்காஷியஸ் கல்லூரியில் நிறைவு செய்யப்பட்டது. கல்லூரி வளாகத்தில் தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இணை இயக்குனரும், தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை செயலருமான குருவாணவர் ஜாண் சாமுவேல் முன்னிலையில் திருமண்டல நிர்வாகிகளால் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிறைவு நிகழ்ச்சியில் அகப்பைக்குளம் சேகர குருவானவர் பாஸ்கரன், நாசரேத் ஒய்எம்சிஏ தலைவர் எபனேசர், செயலாளர் சாமுவேல், கதீட்ரல் தலைமை குருவாணவர் மர்க்காஷியஸ், நாசரேத் நகர பஞ்சாயத்து தலைவர் நிர்மலா ரவி, கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.