பசுமை காடுகள் திட்டத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்
பசுமை காடுகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலட்சுமி கூறி உள்ளார்.
சிக்கல்:
பசுமை காடுகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலட்சுமி கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மரக்கன்றுகள்
தமிழ்நாடு அரசின் பசுமை காடுகள் திட்டத்தின் கீழ் கீழ்வேளூர் வட்டாரத்தில் 43 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. கீழ்வேளூர் வட்டாரத்தில் மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் வேளாண்மை துறையை அணுகி தேவையான மரக்கன்றுகளை பெற்று கொள்ளலாம். இதில் சந்தன மரம், மஞ்சள் கடம்பை, வேங்கை, செம்மரம், குமிழ் தேக்கு, தேக்கு உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் கீழ்வேளூர், தேவூர், கிள்ளுக்குடி, ஆந்தக்குடி, வலிவலம் ஆகிய 5 இடங்களில் உள்ள வேளாண்மை கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு செலவுத்தொகை
எனவே தமிழ்நாடு அரசின் பசுமை காடுகள் திட்டத்தின் கீழ் விவசாய மரக்கன்றுகள் இலவசமாக பெற வட்டாரத்தில் உள்ள உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். இதற்கு கணினி சிட்டா, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் நேரில் வந்து கொடுக்க வேண்டும்.
மேலும் மரக்கன்றுகளை பெற்ற விவசாயிகளுக்கு பராமரிப்பு செலவுத் தொகை வழங்கப்படும். விவசாயிகள் தங்களிடம் உள்ள வயல் வரப்புகள், பராமரிப்பற்று கிடக்கும் திடல்கள், வீட்டை சுற்றியுள்ள இடங்களில் மரக்கன்றுகள் வளர்த்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.