அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
உலகம் முழுவதும் ஜூன் மாதம் 5-ந் தேதி சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரியலூர் மாவட்டம் சிறுவலூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் தலைமை ஆசிரியர் சின்னதுரை கூறுகையில், பூமி மனிதர்கள் மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. மனிதனாகிய நாம் அதனை பல்வேறு வகைகளில் பாழாக்கி வருகிறோம். பூமியை காக்க அதிகளவில் மரங்களை நடவேண்டும். இருசக்கர வாகனங்களை தவிர்த்து பொதுவாகனங்களில் பயணம் செய்ய வேண்டும். கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும் என்றார். இந்தநிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத்துணை தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், கிராம மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.