கலவை எந்திரத்தில் சேலை சிக்கியது; தலை துண்டாகி பெண் பலி


கலவை எந்திரத்தில் சேலை சிக்கியது; தலை துண்டாகி பெண் பலி
x

கலவை எந்திரத்தில் சேலை சிக்கியதால் தலை துண்டாகி பெண் பலியானார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் தலைய நல்லூர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மனைவி பாப்பாயி (வயது 62). கூலி தொழிலாளி. ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவர் புதிய வீடு கட்டி வருகிறார்.

இதற்காக கான்கிரீட் போடும் பணி நேற்று நடைபெற்றது. பாப்பாயியின் தங்கை பேரன் சதீஷ் என்பவர் கலவை எந்திரம் வைத்து கான்கிரீட் போடும் வேலை செய்து வருகிறார். அவருடன் நேற்று ஜல்லி அள்ளி கலவை எந்திரத்தில் கொட்டும் வேலைக்காக பாப்பாயி சென்றார்.

தலை துண்டானது

நேற்று காலை 9.30 மணி அளவில் ஜல்லி கற்களை தகர சட்டியில் அள்ளி இயங்கிக்கொண்டு இருந்த கலவை எந்திரத்துக்குள் பாப்பாயி கொட்டினார். அப்போது பாப்பாயின் பின்புறம் தொங்கிக்கொண்டு இருந்த சேலையின் முந்தானை எந்திரத்தின் சுழட்டியில் பட்டு சிக்கியது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் பாப்பாயி இழுத்து கலவை குடுவையின் மேல் பகுதியில் வீசப்பட்டார். அதில் பட்டதும் பாப்பாயின் தலை, கைகள் துண்டாகி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதை அருகே வேலை செய்துகொண்டு இருந்த தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சியில் அலறினர். கலவை எந்திரத்தில் சிக்கி உயிரிழந்த பாப்பாயிக்கு குமார் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.


Next Story