சாத்தான்குளம் பகுதியில் கன்னடியன் கால்வாய் பணி: சபாநாயகர் மு.அப்பாவு ஆய்வு
சாத்தான்குளம் பகுதியில் கன்னடியன் கால்வாய் பணியை சபாநாயகர் மு.அப்பாவு ஆய்வு செய்தார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் பகுதிக்கு கன்னடியன் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வகையில் கன்னடியன் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அரசூர் ஊராட்சி எம்.எல்.தேரி பகுதியில் பாலம் பணியும் மற்றும் கால்வாய், குளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியினை தமிழக சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் சாலைபுதூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் குளம் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.
அப்போது மு.அப்பாவு கூறுகையில், "எம்.எல்.தேரி பகுதியில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. பொட்டல்புதூர் சுடலை ஆண்டவர் கோவில் பகுதியில் விவசாயிகள் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாத்தான்குளம், திசையன்விளை, ராதாபுரம், நாங்குனேரி, உடன்குடி பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டம் நிறைவேறும்" என்றார். இதில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் தனசேகரன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் கலந்துகொண்டனர்.