சேலத்தில் பள்ளப்பட்டி மாரியம்மன் கோவிலில் சத்தாபரண நிகழ்ச்சி
சேலம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று சத்தாபரண நிகழ்ச்சி நடந்தது.
மாசி திருவிழா
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் வைபவம், அலகு குத்துதல், உருளுதண்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவையொட்டி நேற்று சத்தாபரண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சிவன், பார்வதி, முத்துமலை முருகன், சமயபுரம் மாரியம்மன், வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயார் உள்ளிட்ட பல்வேறு சாமிகளின் சிலைகள் அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
தாரை, தப்பட்டை, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆகிய கிராமிய கலைஞர்களின் நடனத்துடன் இந்த வீதி உலா நடைபெற்றது. இதுதவிர, மாங்கல்யத்தால் வடிவமைக்கப்பட்ட அம்மன் சிலை மற்றும் வெட்டி வேரால் செய்யப்பட்ட அம்மன் சிலைகளும் அலங்கரித்த பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. முக்கிய வீதிகள் வழியாக வந்த சத்தாபரண ஊர்வலத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
தீமிதி விழா
இதேபோல், சேலம் மணக்காடு செல்லியம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி நேற்று மாலை தீமிதி விழா நடந்தது. இதில், அஸ்தம்பட்டி, மணக்காடு, ஜான்சன்பேட்டை, அன்புநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.