சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தா.பேட்டை:
தா.பேட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் தனம், அன்சார் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் ராஜகோபால், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அமுதா, மாநில துணைத் தலைவர் தங்கவேல், நிர்வாகிகள் வெங்கடாசலம், பெருமாள், முருகேசன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கையில் தட்டு ஏந்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஒன்றிய துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.