எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் சத்தாபரணம்
சேலம் குமாரசாமிப்பட்டியில் எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சத்தாபரணம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) திருவிளக்கு பூஜை நடக்கிறது.
சேலம் குமாரசாமிப்பட்டியில் எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சத்தாபரணம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) திருவிளக்கு பூஜை நடக்கிறது.
பங்குனி திருவிழா
சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. திருவிழாவையொட்டி 29-ந் தேதி பொங்கல் வைத்தல், 30-ந் தேதி அக்னி குண்டம் இறங்குதல், 31-ந் தேதி பால்குட ஊர்வலம் நடந்தது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சத்தாபரணம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் அலங்காரம் செய்து திருவீதி உலா நடத்தப்பட்டது. கோவில் முன்பு தொடங்கிய அந்த பல்லக்கில் சக்தி, லட்சுமி, சரஸ்வரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சத்தாபரண ஊர்வலம்
வின்சென்ட், குமாரசாமிப்பட்டி, அஸ்தம்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகளில் வழியாக சத்தாபரணம் ஊர்வலம் சென்றது. அப்போது, வழிநெடுகிலும் பக்தர்கள் நின்று அம்மனை வழிபட்டனர். திருவிழாவையொட்டி நேற்று காலை எல்லைப்பிடாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான சாந்தமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.