மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் விராவலுக்கு - சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்புக்கட்டண ரெயில் - 23-ந் தேதி வரை இயக்கப்படுகிறது
மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் விராவலுக்கு சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்புக்கட்டண ரெயில் 23-ந் தேதி வரை இயக்கப்படுகிறது
சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடர்ந்து மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் விராவல் நகருக்கு சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்புக்கட்டண ரெயில், வருகிற 14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் 4 நாட்களில் குஜராத் மாநிலம் சென்றடைகிறது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.06301) மதுரையில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது. அங்கிருந்து நள்ளிரவு 1.50 மணிக்கு புறப்பட்டு 4-வது நாள் காலை 7.30 மணிக்கு விராவல் சென்றடைகிறது. அதாவது 14-ந் தேதி மாலை 5.40 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரெயில் 17-ந் தேதி காலை 7.30 மணிக்கு விராவல் ரெயில் நிலையம் சென்றடைகிறது. வருகிற 15-ந் தேதியில் இருந்து 23-ந் தேதி வரை மதுரையில் இருந்து புறப்படும் ரெயில் மட்டும் விராவல் ரெயில் நிலையத்துக்கு காலை 9 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், சென்னை, ரேணிகுன்டா, கச்சிகுடா, நான்டெட், பூமா, அகோலா, ஜலகாவோன், நந்துர்பார், சூரத், வதோதரா, அகமதாபாத், சுரேந்திரநகர், ராஜ்கோட் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் 6 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டிகளும், 4 பொதுப்பெட்டிகளும், ஒரு மாற்றுத்திறனாளி பெட்டியும், ஒரு பார்சல் பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.