மகன்கள் கவனிக்கவில்லை எனக்கூறிபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு
மகன்கள் கவனிக்கவில்லை எனக்கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
மகன்கள் கவனிக்கவில்லை எனக்கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம், குன்னத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 88). இவர் தனது மூத்த மகள் கவுரியுடன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுப்பதற்காக நேற்று வந்தார். அப்போது நுழைவுவாயில் பகுதியில் வள்ளியம்மாள் நின்று கொண்டு இருந்தபோது தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திடீரென எடுத்து தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மூதாட்டியிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறி மனு கொடுக்க அனுமதித்தனர். அதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் தான் கொண்டு வந்திருந்த மனுவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
எனது கணவர் முத்து சரவணன். எங்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால் நான் எனது மூத்த மகள் கவுரியுடன் சீனாபுரம் பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறேன்.
மகன்கள் கவனிக்கவில்லை
இந்த நிலையில் எனக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சைபெற்றபோது எனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதற்காக மகன்களிடம் மருத்துவ உதவி கேட்டேன். ஆனால் அவர்கள் உதவி செய்யவில்லை. மகன்கள் இருவரும் அரசு வேலையில் உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி சிகிச்சைக்காக எனது மூத்த மகளுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அப்போது எனது 2 மகன்களின் மனைவிகள், எனது மகளின் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்துவிட்டு மற்றொரு பூட்டை போட்டு பூட்டிச்சென்றனர். என்னை கவனிக்காமலும், மருத்துவ உதவிக்கு பணம் கொடுக்காமலும், எனது வீட்டை அபகரித்த எனது மகன்கள் மற்றும் மருமகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.