கடன் வட்டி விகிதங்களை அதிகரித்தது எஸ்பிஐ...!
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதிகரித்துள்ளது.
சென்னை,
பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.1% அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வங்கி வழங்கியுள்ள நிதி அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்கள் (எம்சிஎல்ஆா்) தவணைக்காலங்களின் அடிப்படையில் 10 அடிப்படை புள்ளிகள் (0.1 சதவீதம்) வரை உயா்த்தப்பட்டுள்ளன. பிப். 15 முதல் இந்த புதிய விகிதம் அமலுக்கு வந்துள்ளது.
வாகனம், வீடு மற்றும் தனிநபா் போன்ற பெரும்பாலான நுகா்வோா் கடன்கள் எம்சிஎல்ஆா் அடிப்படையிலானவை ஆகும். குறைந்த பட்ச கடன் வட்டி விகிதம் 7.85 சதவீதத்திலிருந்து 7.95 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் வங்கிகள் கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உயர்த்தியுள்ளது. எம்சிஎல்ஆர் உயர்வு காரணமாக அதற்கு எதிராக கடன் வாங்குபவர்களுக்கு இஎம்ஐ தொகை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரெப்போ விகிதத்தை ரிசா்வ் வங்கி ஆறாவது முறையாக உயா்த்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் ரெப்போ விகிதம் மொத்தம் 250 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அண்மையில் உயர்த்தியன் எதிரொலியாக வங்கிகளும் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.