நீதிமன்றங்களில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.6½ லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த பெண் கைது கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை


நீதிமன்றங்களில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.6½ லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த பெண் கைது கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றங்களில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.6½ லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண்ணை 2 ஆண்டுகளுக்கு பிறகு கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடலூர்

பண்ருட்டி அருகே உள்ள கரும்பூரை சேர்ந்தவர் ராதாமணி மகன் சாந்தாமணி (வயது 34). இவருக்கு நெல்லிக்குப்பம் ஜீவாநகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் அறிமுகம் கிடைத்தது. அப்போது செந்தில் குமார், தான் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வருவதாகவும், பல பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

தற்போது விழுப்புரம் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை காலியாக உள்ளதாகவும், தன்னிடம் ரூ.2½ லட்சம் கொடுத்தால், அந்த வேலையை வாங்கி தருவதாக கூறினார். இதை நம்பிய அவர் முதல் கட்டமாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்துள்ளார். இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரனும் தனது மகனுக்கு வேலை கேட்டு ரூ.2½ லட்சமும், சத்தியராஜ் என்பவர் வேலை வாங்கி தருமாறு ரூ.2½ லட்சமும் செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளனர். இதற்கு செந்தில்குமார் மனைவி பியூலாவும் உடந்தையாக செயல்பட்டு உள்ளார்.

மோசடி

பணத்தை பெற்ற செந்தில்குமார், அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். இதை அறிந்த அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, அவர்களை 2 பேரும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட 3 பேரும் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

அதில், தங்களிடம் நீதிமன்றத்திலும், வேறு துறையில் அரசு வேலை வாங்கி தருவதாகவும் ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்தை வாங்கி மோசடி செய்த விட்டதாக புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில் குமாரை கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அவரது மனைவி பியூலாவை தேடி வந்தனர்.

கைது

இந்நிலையில் நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடலூர் பில்லாலி வரசித்திவிநாயகா கார்டன் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது, அங்கு டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்த பியூலாவை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைதான செந்தில்குமார் கடலூர் மாவட்ட காவல் துறையில் கருவூலக தலைமை காவலராக பணியாற்றிய போது, காவலர்களுக்கான பணப்பலன்களை கையாடல் செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story