மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.26½ லட்சம் மோசடி; அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்கு
தேனி அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.26½ லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.26½ லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்வாரியத்தில் வேலை
தேனி அருகே கோட்டூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த தர்மர் மகன் ராஜா (வயது 35). அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி மகன் கிருபானந்த தயாநிதி. இவர் தேன்கனிகோட்டையில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
ராஜா அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்து வந்தார். அதை அறிந்த கிருபானந்த தயாநிதி, அவருடைய மனைவி மணிமேகலை, அவர்களுடைய குடும்ப நண்பர்கள் என்று கூறப்படும் தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டையை சேர்ந்த ராமலிங்கம் மகன் முத்துவேல், போடி தென்றல் நகரை சேர்ந்த யேசுராஜாமணி மகன் இமானுவேல் ராஜ்குமார் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு ராஜாவை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் தங்களுக்கு அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலம் மின்வாரியத்தில் வேலை வாங்கிதருவதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது.
4 பேர் மீது வழக்கு
இதனை நம்பிய ராஜா, கிருபானந்த தயாநிதி மற்றும் அவருடைய மனைவியிடம் ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் இருந்தனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், ராஜா புகார் அளித்தார். அதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதேபோல் அதே ஊரைச் சேர்ந்த மேலும் 4 பேரும் கிருபானந்த தயாநிதி உள்ளிட்டோரிடம் அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்படி, ராஜா உள்பட 5 பேரிடமும் மொத்தம் ரூ.26 லட்சத்து 45 ஆயிரம் மோசடி செய்துள்ளதாக கிருபானந்த தயாநிதி, மணிமேகலை, முத்துவேல், இமானுவேல் ராஜ்குமார் ஆகிய 4 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடாசலபதி நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.