இந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கின்ற மோசடி செயல் நடக்கிறது
வக்பு வாரிய சொத்துக்கள் என்ற பெயரில் இந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கின்ற மோசடி செயல் நடக்கிறது என்று எச்.ராஜா கூறினார்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணிசார்பில் வக்பு வாரியத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயன் தலைமை வகித்தார். கோட்ட இணை பொறுப்பாளர் ஸ்ரீநாத், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வெங்கடேசன், கே.பி.சின்னிபிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில விவசாய அணிதலைவர் ஜி.கே.நாகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்திற்கு பிறகு எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
மோசடி செயல்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்த ஆதாரமும் இல்லாமல் வக்பு வாரியசொத்துகளை எடுத்துக்கொள்ளலாம் என்று ஒரு சட்டத்தை இயற்றினார்கள். அதனால் 2013-ல் டெல்லியில் முக்கிய இடங்களில் இருந்து 123 சொத்துக்கள் அபகறிக்கப்பட்டது. பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த சொத்துக்கள் மீண்டும் திருப்பப்பெறப்பட்டது. வக்பு வாரிய சொத்துக்கள் என்ற பெயரில் ஏழை, எளிய இந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கின்ற மோசடி செயல் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்துகளுக்கு எதிராக முதல்-அமைச்சர் ஸ்டாலின் அரசு செயல்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு அடுத்த வேப்பூரில் பூர்வீக நிலத்தை சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்துள்ளனர். சொத்து மாற்றம் சட்டம் கூறுவது கோர்ட்டில் வழக்கு இருந்தாலும் சொத்து யார் கையில் உள்ளதோ அதை அப்படியே பாதுகாக்கவேண்டும். கோர்ட்டில் தீர்ப்பு வந்தால் அதன் படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தற்போது இங்குள்ள இந்துக்களை மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும், சட்டவிரோதமாக வெளியேற்றியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நிர்வாகிகள் கோட்டீஸ்வரன், சுதாகர், குமரேசன், ஏ.எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.