கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு
கொள்ளிடம் பகுதியில் மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகியதால் கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகியதால் கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மழையால் நெற்பயிர்கள் அழுகின
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் கொள்ளிடம் பகுதிபெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. சம்பா சாகுபடி நெற்பயிர்கள் கடந்த 10 நாட்களாக மழைநீரில் மூழ்கி கிடந்தது. தற்போது மழை நின்றதால் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்துள்ளது. இருந்த போதிலும் அழுகிய நெற்பயிர்கள் காய்ந்து வீணாகி விட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மறு சாகுபடி செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
பச்சை பெருமாநல்லூர், கொடைகாரமூலை, ஆரப்பள்ளம், எடமணல், வேட்டங்குடி, ஆலாலசுந்தரம், மாதானம், குதிரைகுத்தி, மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஒரு சில விவசாயிகள் மீண்டும் சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர்.
வைக்கோல் தட்டுப்பாடு
நெற்பயிர்கள் அழுகியதால் கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியது.
கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சம்பா சாகுபடி செய்தோம். மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சாகுபடி செய்ய எங்களிடம் எந்தவிதமாக நிதி ஆதாரமும் இல்லை.
மழையால் வயலில் இருந்த நாற்றுகள் அழுகியதால் தற்போது நிலங்கள் தரிசு போன்று காணப்படுகிறது.
விவசாயிகள் கவலை
ஒரு சில இடங்களில் நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து அழுகி காய்ந்து கிடக்கின்றது. தற்போது மழை பெய்து வருவதால் வைக்கோல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனை செய்து வருகின்றனர். எனவே இனிவரும் காலங்களில் மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படாத வகையில் கொள்ளிடம் கிழக்கு பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.