உளுந்தூர்பேட்டை அருகே பயங்கரம் கழுத்தை நெரித்து பெண் படுகொலை கணவர், மாமியார் கைது
உளுந்தூர்பேட்டை அருகே கழுத்தை நெரித்து பெண் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகள் செல்வி(வயது 30). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான ராமகிருஷ்ணன்(33) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு லோகிதாஸ், கோகுல் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி, தனது கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.
பெண் சாவு
இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் ராமகிருஷ்ணனின் தந்தை கல்வராயன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக செல்வி அயன்குஞ்சரம் கிராமத்திற்கு சென்றார். அப்போது அவரை கணவர் ராமகிருஷ்ணனுடன் சேர்ந்து வாழும்படி உறவினர்கள் கேட்டுள்ளனர். அதன்பேரில் செல்வி அயன்குஞ்சரம் கிராமத்தில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் செல்வி உயிரிழந்து விட்டதாக அவரது தாய் நடையம்மாளுக்கு ராமகிருஷ்ணனின் வீட்டில் இருந்து தகவல் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நடையம்மாள் மற்றும் உறவினர்கள் அயன்குஞ்சரம் கிராமத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது செல்வி உயிரிழந்த நிலையில் தரையில் கிடந்துள்ளார்.
சாவில் சந்தேகம்
தனது மகள் சாவில் சந்தேகம் எழுந்த நிலையில் இதுகுறித்து அவர் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து செல்வியின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கைது
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் செல்விக்கும் அவருடைய மாமியார் நாககன்னிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாககன்னி, செல்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இதற்கு உடந்தையாக அவருடைய கணவர் ராமகிருஷ்ணன் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கொலை செய்ததற்காக நாக கன்னியையும், உடந்தையாக இருந்த ராமகிருஷ்ணனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.