கழிவுநீரை பாதுகாப்பாக அகற்ற சமுதாய உறிஞ்சு குழாய்கள் அமைக்கும் திட்டம்-ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர்


கழிவுநீரை பாதுகாப்பாக அகற்ற சமுதாய உறிஞ்சு குழாய்கள் அமைக்கும் திட்டம்-ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் கழிவுநீரை பாதுகாப்பாக அகற்ற சமுதாய உறிஞ்சு குழாய்கள் அமைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் முருகண்ணன் கூறினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கழிவுநீரை பாதுகாப்பாக அகற்ற சமுதாய உறிஞ்சு குழாய்கள் அமைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் முருகண்ணன் கூறினார்.

உறிஞ்சு குழாய்கள்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமுதாய உறிஞ்சு குழாய்கள் அமைத்து கழிவுநீர் மேலாண்மை தொடர்பான கொத்தனார்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இணை இயக்குனர் முருகண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவி காமாட்சிமூர்த்தி முன்னிலை வைத்தார்.

முன்னதாக செயல்முறை பயிற்சிக்காக, ஊராட்சி ஒன்றிய அலுவலக கழிவுநீரை பாதுகாப்பாக அகற்றி மேலாண்மை செய்யும் வகையில் உறிஞ்சுகுழி தோண்டப்பட்டு அதில் சிமெண்டு உறைகள் இறக்கப்பட்டு அடிப்பகுதியிலும், பக்கவாட்டிலும் தேவையான கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டன. பின்னர் உறிஞ்சுகுழிக்கு கழிவு நீர் செல்ல சாய்வு குழாய் அமைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான தொழில்நுட்பம் குறித்தும் கட்டிட தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நிலத்தடி நீர் மட்டம்

தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் பயிற்சி முகாம் நடந்தது. அப்போது மாவட்ட இணை இயக்குனர் பேசுகையில், அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர் கழிவுநீராக மாறி பொது இடங்களிலும், வீடுகளின் அருகிலும் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க தனி வீடுகளுக்கும், பொது இடங்களிலும் கழிவு நீரை பாதுகாப்பாக அகற்ற சமுதாய உறிஞ்சு குழாய்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கழிவு நீரை சுத்திகரித்து நிலத்திற்குள் செலுத்துவதால் பொது இடங்களில் கழிவு நீர் தேங்காமல் தடுப்பதோடு, நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்தலாம் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்ற கொத்தனார்கள் முறையாக கட்டமைப்பை மேற்கொள்ள வேண்டும்.

வீடுகளில் அமைக்க...

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சமுதாய உறிஞ்சு குழாய்கள் அமைக்க விரும்பினால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகலாம்' என்றார்.

முகாமில் செயற்பொறியாளர் பிரேம்குமார், ஒன்றிய ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, ஒன்றிய மேலாளர் ஆதி.ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story