வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பவானி தெரிவித்துள்ளார்.
வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பவானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உதவித்தொகை
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
தாசில்தார் அலுவலகத்தில் ஆன்லைனில் பெறப்பட்ட வருமான சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மருத்துவப்படி
இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, கிருஷ்ணகிரி மாவட்ட மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.