வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை
திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து முறையாக புதுப்பித்து இருக்க வேண்டும்.
2018-ம் ஆண்டு மார்ச் 31 மற்றும் அதற்கு முன்பு பதிவுசெய்து 5 ஆண்டுகள் பூர்த்தி ஆகி இருக்கவேண்டும். 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இறுதி வகுப்பு தவறியவர்களுக்கு ரூ.200, இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.300, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 என வழங்கப்படுகிறது.
தொலைதூர கல்வி
தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் 45 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்கவேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரமாக இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதிவகுப்புவரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
பதிவுசெய்து 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். மேலும் வேறு எந்த அலுவலகத்திலும் அரசு உதவித்தொகைப் பெறுபவர்கள் இந்த திட்டத்தில் பயனடைய தகுதியற்றவர்கள். உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழுநேர மாணவராக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூர கல்வியில் படிப்பவராக இருக்கலாம்.
இணையதளத்தில் பதிவிறக்கம்...
அரசு மற்றும் தனியார் துறையில் ஊழியராகவும், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடுபவராகவும் இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டுமாயின் முற்றிலும் வேலை இல்லாதவர்களாக இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் விண்ணப்பத்தை https;//tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்திசெய்து அடுத்த மாதம் (மே) 31-ந்தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.