புதுமைப்பெண் திட்டத்தில் 3,026 மாணவிகளுக்கு உதவித்தொகை


புதுமைப்பெண் திட்டத்தில் 3,026 மாணவிகளுக்கு உதவித்தொகை
x

வேலூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 3,026 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் குமரவேல் பாண்டியன் கூறினார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 3,026 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் குமரவேல் பாண்டியன் கூறினார்.

கலெக்டர் ஆய்வு

முதல்-அமைச்சரின் புதுமைப்பெண் திட்டம் குறித்து வேலூர் தியாகராஜபுரத்தில் உள்ள அருண் நர்சிங் கல்லூரியில் நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி ஆய்வு செய்தார். கல்லூரி தலைவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் வி.எஸ்.விஜய் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சுனிதா பிரியதர்ஷினி வரவேற்றார்.

மாணவிகளிடையே கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

முதல்-அமைச்சரின் புதுமைப்பெண் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்த 45 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகளில் 3,026 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை கடந்த 3 மாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் உங்களுக்கு ஒரு வரபிரசாதம் ஆகும். உயர்கல்வியில் நீங்கள் சாதிக்க இந்த உதவி தொகை உங்களுக்கு உதவும்.

உதவித்தொகைக்கு வேலூர் மாவட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவிகள் 2,532 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1,249 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விரைவில் பள்ளி கல்வித்துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன் உதவித்தொகை வழங்கப்படும். மற்றவர்களின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

ஏ.டி.எம். கார்டு

அவை பரிசீலிக்கப்பட்டு இந்த மாத இறுதிக்குள் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். வங்கி கணக்கு வைத்திருக்கும் மாணவிகளுக்கு ஏ.டி.எம். கார்டு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர் அவர் பேசினார்.

தொடர்ந்து வேலூர் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) கோமதி திட்டத்தின் தன்மை குறித்து பேசினார்.

இதில் மாணவிகள், பேராசிரியைகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் கலைச்செல்வி நன்றி கூறினார்.


Next Story