ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் படிக்கும் 2,649 மாணவ- மாணவிகளுக்கு 16-ந் தேதி முதல் காலை உணவு; சமையல் கூடத்தை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்
ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் படிக்கும் 2 ஆயிரத்து 649 மாணவ-மாணவிகளுக்கு 16-ந் தேதி முதல் காலை உணவு வழங்குவதற்கான சமையல் கூடத்தை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் படிக்கும் 2 ஆயிரத்து 649 மாணவ-மாணவிகளுக்கு 16-ந் தேதி முதல் காலை உணவு வழங்குவதற்கான சமையல் கூடத்தை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.
மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு
தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் முதல் கட்டமாக நாளை (வியாழக்கிழமை) காலை உணவு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தொடங்கி வைக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 26 தொடக்கப்பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் 2 ஆயிரத்து 649 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை உணவு வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு காலை உணவு சமைக்க, ஈரோடு மாநகராட்சி காமராஜ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் கட்டப்பட்டு இருக்கிறது. இங்கிருந்து காலை உணவு 26 பள்ளிக்கூடங்களுக்கும் தினசரி அனுப்பி வைக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு பரிமாறப்படும்.
கலெக்டர் பார்வையிட்டார்
இந்த மையத்தை ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நேற்று பார்வையிட்டார். மொத்த மாணவ-மாணவிகள், பணியாளர்கள், உணவு சமைத்து கொடுக்க ஆகும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாநகராட்சி மற்றும் சத்துணவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். பின்னர் அவர் கூறும்போது, 'தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி (அதாவது நாளை) சென்னையில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து 16-ந் தேதி முதல் ஈரோடு மாநகராட்சியில் 26 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 2 ஆயிரத்து 649 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும். 100 மாணவ-மாணவிகளுக்கு ஒரு பணியாளர் என்ற விகிதத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்' என்றார். இந்த நிகழ்வின் போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணிவண்ணன், மாவட்ட கல்வி அதிகாரி ஜோதிசந்திரா உள்பட பலர் உடன் இருந்தனர்.