கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பள்ளி வளாகங்கள் பராமரிப்பு எப்படி?-ஆசிரியர், பெற்றோர் கருத்து
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி பள்ளி வளாகங்கள் பராமரிப்பு எப்படி உள்ளது என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி உள்ளன. இதில் ஓசூர் மாநகராட்சியில் கல்வித்துறை சார்பில் 44 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
அதே போல கிருஷ்ணகிரி நகராட்சியில் கல்வித்துறை சார்பில் 71 தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் ஆவார்கள். மேலும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள், நடுத்தர வர்த்தக்கத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள் இங்குள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
அடிப்படை வசதிகள்
பல விதமான சமூக, பொருளாதார சூழ்நிலைகளில் மாணவர்கள் இங்குள்ள நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் படித்தாலும் மாணவ, மாணவிகள் அனைவரும் சமமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை விட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.
நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படித்து வரும் மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் கல்வியின் தரம், வகுப்பறை, பள்ளி வளாகம், கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்றவை எப்படி இருக்கின்றன என்பது பற்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
கூடுதல் வகுப்பறைகள்
ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்.நாகேஷ் கூறியதாவது:-
சிப்காட் அருகே பேடர பள்ளியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் எட்டாம் 8-ம் வகுப்பு வரை 950-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆங்கில மொழியில் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில், தலைமை ஆசிரியர் உள்பட 21 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். விளையாட்டு, ஓவியம் மற்றும் டைலரிங் என 3 சிறப்பாசிரியர்களும் பணி புரிந்து வருகின்றனர்.
ஓசூர் மாநகராட்சியில், ஒரு முன் மாதிரி பள்ளியாக அதிக மாணவர் படிக்கின்ற பள்ளியாக, எங்கள் பள்ளி உள்ளது. இடம் பற்றாக்குறை காரணமாக 3 வெவ்வேறு பள்ளி இயங்கி வருகிறது. மாநகராட்சியிலிருந்து 3 இடத்துக்கும், 3 ஆயாக்களை வழங்கியுள்ளனர். இவர்கள் தினந்தோறும் பள்ளியை சுத்தமாகவும், மற்றும் கழிவறைகள் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முழு நேரம் பள்ளியில் பணியாற்றி வருகிறார்கள்.
ஒழுக்கமான, தரமான கல்வி வழங்குதல் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தனியார் பள்ளிக்கு மேலாக பள்ளி இயங்கி வருவதால், அருகில் உள்ள அனைத்து பெற்றோர்கள் தரமான கல்விக்காக தங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். தேசிய திறனாய்வு தேர்வில், 10 ஆண்டுகளாக இப்பள்ளியில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று கல்வி ஊக்க ஊதியம் பெற்றுக் கொண்டு வருகிறார்கள்.இது தரமான கல்விக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
எங்கள் பள்ளிக்கு கூடுதலாக 6 வகுப்பறைகள் தேவைப்படுகிறது. மேலும், மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளதால் கூடுதல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அதே போல மாணவர்கள் அமர்வதற்கு 50 பெஞ்ச் டெஸ்க் தேவை. மாணவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் தேவை. மேலும் 3 இடத்தில், 3 ஸ்மார்ட் கிளாஸ் வழங்க வேண்டும். இரவு நேரத்தில் பாதுகாப்பு பணிக்கு காவலாளி தேவை. மூன்று இடத்தில், தனித்தனியாக இயங்கி வரும் இந்த பள்ளி ஒரே இடத்தில் இயங்க வழிவகை செய்ய வேண்டும். பள்ளிக்கு, கணினி ஆசிரியர்கள் தேவைப்படுகிறது. வரும் கல்வி ஆண்டுக்கு (2023-amp;-2024) 50 பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில்.சேர்ப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றி தந்தால், இந்த பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்மாதிரி மாநகராட்சி பள்ளியாக திகழும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஓசூர் பஸ்தியை சேர்ந்த சொப்னா கூறியதாவது:-
ஓசூர் சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஓசூர் பகுதியில் உருது, தெலுங்கு, கன்னட மொழி பாடங்கள் உள்ள அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பல இடங்களில் போதிய ஆசிரியர்கள் இல்லை. எனவே ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
அதே போல அனைத்து பள்ளிகளுக்கும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து, தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் சேர்க்கை விகிதமும் அதிகரித்துள்ளது. அதே போல தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளன.
கூடுதல் கட்டிடங்கள்
கிருஷ்ணகிரியை சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமாக அசோகன் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். நகரில் அதிக மாணவிகள் படிக்க கூடிய பள்ளியாக இந்த பள்ளி உள்ளது. குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பலரும் தங்களின் பிள்ளைகளை இந்த பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.