அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி தீவிரம்
திருப்பூர் மாநகரில் அரசு பள்ளிகளில் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரசு பள்ளிகளில் பராமரிப்பு
பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு இன்னும் 3 வாரங்களே உள்ளன. விரைவில் பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கும். இதனால் அரசு பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணி பொதுநிதியை கொண்டு மேம்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிதி நிலைக்கு ஏற்ப
பள்ளி நுழைவுவாசல், சுற்றுச்சுவர் மைதானம், வராண்டா, வகுப்பறை, கட்டிடங்கள், தினசரி இறைவணக்க கூட்டம் நடக்குமிடம், கலையரங்கம், நூலகம், ஆய்வு கூடம் உள்ளிட்ட கட்டிடங்கள் பழுதடைந்து இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். நிதிநிலைக்கு ஏற்ப பெயிண்ட், சுண்ணாம்பு பூச்சு பணிகளை தொடங்க வேண்டும். மின்கம்பி, கேபிள்களில் உரசும் வகையில் அல்லது மாணவர்கள் அதிகம் நடமாடும் பகுதியில் உயரமாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய கல்வியாண்டு தொடங்கும்போது இந்த பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பராமரிப்பு பணி தொடங்கி நடக்கிறது.