பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை
தானிப்பாடி அருகே பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே சே.ஆண்டப்பட்டு கிராமத்தில் உள்ள ரைஸ்மில் தெருவில் வசித்து வருபவர் சக்திவேல் (வயது 45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (40). இவர்களுக்கு அனுஷா (18), சந்தியா (16) என 2 மகள்களும், தனுஷ் (13) ஹரிஷ் (12) என 2 மகன்களும் உண்டு. இதில் சந்தியா தானிப்பாடி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சந்தியா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தானிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.