ஆட்டோக்களில் வதைபடும் பள்ளிக்குழந்தைகள்


ஆட்டோக்களில் வதைபடும் பள்ளிக்குழந்தைகள்
x
தினத்தந்தி 5 July 2023 1:00 AM IST (Updated: 5 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மாணவ, மாணவிகள் ஆட்டோகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்கிறது. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தேனி

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த 6 வயது சிறுமி கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே பள்ளியின் பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த பஸ்சில் இருந்த பெரிய ஓட்டை வழியாக சிறுமி தவறி விழுந்து பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

அதன்பிறகு தமிழகம் முழுவதும் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கல்வித்துறை, போலீஸ் துறையினர் இணைந்த குழுவினர் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன்பு அனைத்து பள்ளி வாகனங்களையும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படு வருகின்றன.

இதனால், பள்ளி வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் ஆட்டோக்களில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

ஆட்டோக்களில் ஆபத்து பயணம்

பெரும்பாலும் தனியார் பள்ளிகள் தான் மாணவ, மாணவிகளுக்கான பஸ் வசதியை கொண்டுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பள்ளிகளில் பஸ் வசதி கிடையாது. அத்தகைய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பஸ்கள், ஆட்டோக்களில் தான் பள்ளிக்கு வருகின்றனர். நீண்ட தூரத்தில் இருந்து பள்ளிக்கு வருபவர்கள் பஸ்களிலும், அருகாமையில் இருந்தும், பஸ் வசதி குறைவான பகுதிகளில் இருந்தும் வருபவர்கள் ஆட்டோக்களிலும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். காலையில் பள்ளிக்கு வரும் போதும், மாலையில் பள்ளி முடிந்து திரும்பும் போதும் ஆட்டோக்களில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் காட்சிகளை பார்த்தாலே மனம் பதறுகிறது. அந்த அளவுக்கு சிறிய ஆட்டோவுக்குள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும், ஒருவர் மடியில் மற்றொருவர் அமர்ந்து கொண்டும் பெரும் சிரமங்களை பள்ளிக் குழந்தைகள் அனுபவித்து வருகின்றனர். அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு அசுர வேகத்தில் செல்லும் ஆட்டோக்களில் ஆபத்தான பயணம் செய்பவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.

15-க்கும் மேற்பட்டோர்

தேனி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகள் மட்டுமின்றி நகரை ஒட்டியுள்ள ஊரக பகுதிகளிலும் இதுபோன்ற ஆபத்து பயணங்கள் தொடர்கிறது. ஒரு ஆட்டோவில் பெரியவர்கள் என்றால் 3 பேரையும், சிறுவர்கள் என்றால் 5 பேரையும் மட்டுமே ஏற்ற வேண்டும். ஆனால், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் என்றால் 15-க்கும் மேற்பட்டவர்களையும், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் என்றால் 10-க்கும் மேற்பட்டவர்களையும் ஏற்றிச் செல்கின்றனர். தேனி நகரில் காலை நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் ஆங்காங்கே நிற்கின்றனர். அவர்களின் கண் முன்னே இந்த ஆபத்து பயணம் தொடர்வதும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் தொடர்கிறது. பள்ளி திறக்கும் முன்பு தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில், பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கூட நடத்தப்படுவது இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கல்லூரிகளுக்கும் மாணவ, மாணவிகள் ஆட்டோகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்கிறது.

இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கட்டுப்படியாக வேண்டும்

கம்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுருளி கூறும்போது, 'பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நகர்ப்புற பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து அருகாமையில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கு ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.700 முதல் ரூ.800 வீதமும், புறநகர் பகுதியில் இருந்து நகரில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல ஒரு குழந்தைக்கு ரூ.1,000 வீதமும் ஆட்டோ டிரைவர்கள் வசூல் செய்கின்றனர். விதியை பின்பற்றி 5 பேரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்றால் நகர் பகுதிக்கு ரூ.1,500 வீதமும், ஊரக பகுதிக்கு ரூ.2,000 வீதமும் வசூலித்தால் தான் கட்டுப்படியாகும். ஆனால், பெற்றோர்கள் அந்த அளவுக்கு கொடுப்பது இல்லை. கட்டுப்படியாக வேண்டும் என்பதற்காக கூடுதல் எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் நிலைக்கு ஆட்டோ டிரைவர்கள் தள்ளப்படுகின்றனர். எனவே, மீட்டர் ஆட்டோ போன்று பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்கு அரசே கட்டுப்படியாகும் வகையில் குறிப்பிட்ட ஒரு கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிக்கலாம்' என்றார்.

தவறான மனநிலை

தேனியை சேர்ந்த விவசாயி மனோஜ்குமார் கூறும்போது, 'எனது குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களை பள்ளி பஸ்சில் அனுப்பி வருகிறேன். ஒரு குழந்தைக்கு 3 மாதங்களுக்கு ரூ.5,500 பஸ் கட்டணம் செலுத்துகிறேன். ஆட்டோவில் அதிக குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ டிரைவர்கள் வேகமாக செல்வதை பார்க்கும் போது மனதுக்குள் பதற்றம் ஏற்படுகிறது. அதுபோன்ற பயணங்களை தடுக்க வேண்டும். பெற்றோர்கள் மாதம் ரூ.500, ரூ.1,000 மிச்சப்படுத்தும் நோக்கில் குழந்தையை அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் உள்ள ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். அது தவறான மனநிலை. வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போலீசார் இதை வேடிக்கை பார்க்கக்கூடாது. அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆபத்தான பயணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Related Tags :
Next Story