கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கூடங்கள் திறப்பு: மாணவ-மாணவிகளை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்- இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன
கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிக்கூடங்கள் திறந்ததையொட்டி ஈரோட்டில் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
ஈரோடு
கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிக்கூடங்கள் திறந்ததையொட்டி ஈரோட்டில் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பள்ளிக்கூடங்கள் திறப்பு
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன. 2022-2023-ம் கல்வி ஆண்டின் முதல்நாளான நேற்று மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று அனைத்து அரசு பள்ளிக்கூடங்கள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பள்ளி திறப்பையொட்டி நேற்று காலையில் இருந்தே மாணவ-மாணவிகள் பரபரப்பாக காணப்பட்டனர். பெற்றோரும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும் வகையில் பணிகளை தொடங்கினா்.
மகிழ்ச்சி
பள்ளிக்கூடங்கள் 8.50 மணி முதல் 9.10 மணிக்குள் தொடங்கும் என்ற நிலையில் பல பள்ளிக்கூடங்களில் 8 மணிக்கே மாணவ-மாணவிகள் வரத்தொடங்கினார்கள். ஆசிரிய-ஆசிரியைகளும் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் மாணவர்களை பார்ப்பதால் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர்.
தனியார் பள்ளிக்கூடங்களில் புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகள் தவிர்த்து அனைத்து மாணவ-மாணவிகளும் சீருடைகளுடன் வரவேண்டும் என்று ஏற்கனவே பள்ளிக்கூட நிர்வாகங்கள் அறிவித்த நிலையில் பெரும்பாலான மாணவ-மாணவிகள் சீருடைகளில் வந்தனர். புதிய சீருடைகள், புதிய புத்தகப்பை, பேனா, பென்சில் என்று அனைத்தும் புதிதாக மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்தனர். கடந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று புதிய வகுப்புகளுக்கு செல்வதால் தங்கள் வகுப்பறைகளை தேடிச்சென்றவர்களுக்கு ஆசிரிய-ஆசிரியைகள் உதவி செய்தனர்.
ஆரத்தி எடுத்து வரவேற்பு
அரசு பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை பெரும்பாலான மாணவ-மாணவிகள் வண்ண உடைகளில் பள்ளிக்கூடங்களுக்கு வந்திருந்தனர். மாணவ-மாணவிகளின் உற்சாகத்துக்கு ஈடாக ஆசிரிய ஆசிரியைகளும் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர்.
ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை கே.சுமதி தலைமையில் ஆசிரியைகள் அனைத்து மாணவ-மாணவிகளையும் வாசலில் நின்று வரவேற்று பள்ளிக்கூடத்துக்குள் அனுப்பி வைத்தனர். முதலாம் வகுப்புக்கு புதிதாக சேர்ந்து பள்ளிக்கூட படிப்பை தொடங்கிய அனைத்து மணவர்களையும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்று வகுப்பறைகளுக்குள் அழைத்துச்சென்றனர்.
இங்கு அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன் நேரில் வந்து பார்வையிட்டார்.
அரசு பள்ளிகள்
ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் வி.எஸ்.முத்துராமசாமி தலைமையில் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் கொடுத்து ஆசிரிய-ஆசிரியைகள் உற்சாகமாக வரவேற்றனர். இதுபோல் காவிரி ரோடு, திருநகர்காலனி, காளைமாடு சிலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் (ஜி.டி.எஸ்.) பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ-மாணவிகளை வரவேற்றனர். குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் கோபால் பாடப்புத்தகங்கள் வழங்கினார். இதுபோல் இடையன்காட்டு வலசு தொடக்கப்பள்ளி மற்றும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பெரிய வலசு, சு.க.வலசு, அசோகபுரம் என்று மாநகராட்சியில் உள்ள அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் நேற்று வகுப்புகள் உற்சாகமாக தொடங்கின.
இலவச புத்தகங்கள்
பள்ளிக்கூடம் தொடங்கிய முதல் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. சில பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்ததால் உடனடியாக புத்தகங்கள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. விரைவில் தேவையான புத்தகங்கள் கல்வித்துறையிடம் இருந்து பெறப்பட்டு மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்படும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அரசுப்பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கையும் நேற்று தொடங்கியது. மழலையர் வகுப்புகள் செயல்படும் என்று தமிழக கல்வித்துறை அறிவித்ததை தொடர்ந்து அரசு பள்ளிக்கூடங்களில் மழலையர் வகுப்புகளுக்கான சேர்க்கையும் நேற்று தொடங்கியது.